சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
-
سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
17:1 -
وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِنْ دُونِي وَكِيلًا
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
17:2 -
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
17:3 -
وَقَضَيْنَا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்| “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
17:4 -
فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًا مَفْعُولًا
எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
17:5 -
ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا
பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
17:6 -
إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்).
17:7 -
عَسَىٰ رَبُّكُمْ أَنْ يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدْتُمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا
(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.
17:8 -
إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
17:9 -
وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.
17:10 -
وَيَدْعُ الْإِنْسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ ۖ وَكَانَ الْإِنْسَانُ عَجُولًا
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:11 -
وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
17:12 -
وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
17:13 -
اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
17:14 -
مَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا
எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
17:15 -
وَإِذَا أَرَدْنَا أَنْ نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا
நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.
17:16 -
وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا
நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
17:17 -
مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
17:18 -
وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
17:19 -
كُلًّا نُمِدُّ هَٰؤُلَاءِ وَهَٰؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا
இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
17:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்