சூரா 11 ஸூரத்து ஹூது, அயாஹ் 69 – 74

  1. وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَىٰ قَالُوا سَلَامًا ۖ قَالَ سَلَامٌ ۖ فَمَا لَبِثَ أَنْ جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ

    நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

    11:69
  2. فَلَمَّا رَأَىٰ أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۚ قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَىٰ قَوْمِ لُوطٍ

    ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

    11:70
  3. وَامْرَأَتُهُ قَائِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِنْ وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ

    அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.

    11:71
  4. قَالَتْ يَا وَيْلَتَىٰ أَأَلِدُ وَأَنَا عَجُوزٌ وَهَٰذَا بَعْلِي شَيْخًا ۖ إِنَّ هَٰذَا لَشَيْءٌ عَجِيبٌ

    அதற்கு அவர் கூறினார்| “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”

    11:72
  5. قَالُوا أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللَّهِ ۖ رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ ۚ إِنَّهُ حَمِيدٌ مَجِيدٌ

    (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

    11:73
  6. فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ وَجَاءَتْهُ الْبُشْرَىٰ يُجَادِلُنَا فِي قَوْمِ لُوطٍ

    (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.

    11:74

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்