சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 27 – 32
-
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
5:27 -
لَئِنْ بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ ۖ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ
அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
5:28 -
إِنِّي أُرِيدُ أَنْ تَبُوءَ بِإِثْمِي وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ ۚ وَذَٰلِكَ جَزَاءُ الظَّالِمِينَ
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
5:29 -
فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
5:30 -
فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ ۚ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَٰذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي ۖ فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
5:31 -
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَٰلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
5:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்