சூரா 10 ஸூரத்து யூனுஸ் (நபி)

  1. وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَلَا أَصْغَرَ مِنْ ذَٰلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ

    நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

    10:61
  2. أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

    (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    10:62
  3. الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ

    அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.

    10:63
  4. لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

    அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

    10:64
  5. وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ إِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا ۚ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

    (நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

    10:65
  6. أَلَا إِنَّ لِلَّهِ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

    அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.

    10:66
  7. هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ

    நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

    10:67
  8. قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا ۗ سُبْحَانَهُ ۖ هُوَ الْغَنِيُّ ۖ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ إِنْ عِنْدَكُمْ مِنْ سُلْطَانٍ بِهَٰذَا ۚ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

    அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?

    10:68
  9. قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ

    “அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.

    10:69
  10. مَتَاعٌ فِي الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيقُهُمُ الْعَذَابَ الشَّدِيدَ بِمَا كَانُوا يَكْفُرُونَ

    உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

    10:70
  11. وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَاتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوا أَمْرَكُمْ وَشُرَكَاءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوا إِلَيَّ وَلَا تُنْظِرُونِ

    மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.

    10:71
  12. فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ

    “ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).

    10:72
  13. فَكَذَّبُوهُ فَنَجَّيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ وَجَعَلْنَاهُمْ خَلَائِفَ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۖ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِينَ

    அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

    10:73
  14. ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانُوا لِيُؤْمِنُوا بِمَا كَذَّبُوا بِهِ مِنْ قَبْلُ ۚ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ الْمُعْتَدِينَ

    அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.

    10:74
  15. ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُوسَىٰ وَهَارُونَ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ بِآيَاتِنَا فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ

    இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.

    10:75
  16. فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا إِنَّ هَٰذَا لَسِحْرٌ مُبِينٌ

    நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.

    10:76
  17. قَالَ مُوسَىٰ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ

    அதற்கு மூஸா| “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.

    10:77
  18. قَالُوا أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا وَتَكُونَ لَكُمَا الْكِبْرِيَاءُ فِي الْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ

    (அதற்கு) அவர்கள்| எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.

    10:78
  19. وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ

    ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.

    10:79
  20. فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُوسَىٰ أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ

    அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.

    10:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்