சூரா 31 ஸூரத்து லுக்மான்

  1. وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا ۚ أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَىٰ عَذَابِ السَّعِيرِ

    “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

    31:21
  2. وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ ۗ وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

    எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.

    31:22
  3. وَمَنْ كَفَرَ فَلَا يَحْزُنْكَ كُفْرُهُ ۚ إِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ

    (நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது; அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.

    31:23
  4. نُمَتِّعُهُمْ قَلِيلًا ثُمَّ نَضْطَرُّهُمْ إِلَىٰ عَذَابٍ غَلِيظٍ

    அவர்களை நாம் சிறிது சுகிக்கச் செய்வோம்; பின்னர் நாம் அவர்களை மிகவும் கடுமையான வேதனையில் (புகுமாறு) நிர்ப்பந்திப்போம்.

    31:24
  5. وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ قُلِ الْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

    “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், “அல்லாஹ்” என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்று நீர் கூறுவீராக; எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

    31:25
  6. لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ إِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

    வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.

    31:26
  7. وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

    மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

    31:27
  8. مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ إِلَّا كَنَفْسٍ وَاحِدَةٍ ۗ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ

    (மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.

    31:28
  9. أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي إِلَىٰ أَجَلٍ مُسَمًّى وَأَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

    “நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.

    31:29
  10. ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ

    எதனாலென்றால் நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யான (இறை)வனாவான்; அவனை அன்றி அவர்கள் பிரார்த்திப்பவையாவும் அசத்தியமானவை; மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே உன்னத மிக்கவன்; மகாப் பெரியவன்.

    31:30
  11. أَلَمْ تَرَ أَنَّ الْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِنِعْمَتِ اللَّهِ لِيُرِيَكُمْ مِنْ آيَاتِهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ

    தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருள் கொடையைக் கொண்டு நிச்சயமாகக் கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமை மிக்க - நன்றியறிதலுடைய ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

    31:31
  12. وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ ۚ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ

    (கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் - எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.

    31:32
  13. يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا ۚ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ

    மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.

    31:33
  14. إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

    நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

    31:34

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்