சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 10 – 25

  1. إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَنْ نَكَثَ فَإِنَّمَا يَنْكُثُ عَلَىٰ نَفْسِهِ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَاهَدَ عَلَيْهُ اللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

    நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.

    48:10
  2. سَيَقُولُ لَكَ الْمُخَلَّفُونَ مِنَ الْأَعْرَابِ شَغَلَتْنَا أَمْوَالُنَا وَأَهْلُونَا فَاسْتَغْفِرْ لَنَا ۚ يَقُولُونَ بِأَلْسِنَتِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ ۚ قُلْ فَمَنْ يَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًا ۚ بَلْ كَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

    (நபியே!) போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்| “எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன; எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!” எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்” எனக் கூறும்.

    48:11
  3. بَلْ ظَنَنْتُمْ أَنْ لَنْ يَنْقَلِبَ الرَّسُولُ وَالْمُؤْمِنُونَ إِلَىٰ أَهْلِيهِمْ أَبَدًا وَزُيِّنَ ذَٰلِكَ فِي قُلُوبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ وَكُنْتُمْ قَوْمًا بُورًا

    “(நீங்கள் கூறுவது போல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.”

    48:12
  4. وَمَنْ لَمْ يُؤْمِنْ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا

    அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.

    48:13
  5. وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

    மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

    48:14
  6. سَيَقُولُ الْمُخَلَّفُونَ إِذَا انْطَلَقْتُمْ إِلَىٰ مَغَانِمَ لِتَأْخُذُوهَا ذَرُونَا نَتَّبِعْكُمْ ۖ يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلَامَ اللَّهِ ۚ قُلْ لَنْ تَتَّبِعُونَا كَذَٰلِكُمْ قَالَ اللَّهُ مِنْ قَبْلُ ۖ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا ۚ بَلْ كَانُوا لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًا

    போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், “நாங்களும் உங்களைப் பின்பற்றி வர அனுமதி கொடுங்கள்” என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்” என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக; ஆனால், அவர்கள்| “அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.

    48:15
  7. قُلْ لِلْمُخَلَّفِينَ مِنَ الْأَعْرَابِ سَتُدْعَوْنَ إِلَىٰ قَوْمٍ أُولِي بَأْسٍ شَدِيدٍ تُقَاتِلُونَهُمْ أَوْ يُسْلِمُونَ ۖ فَإِنْ تُطِيعُوا يُؤْتِكُمُ اللَّهُ أَجْرًا حَسَنًا ۖ وَإِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُمْ مِنْ قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا

    பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்| “நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே!) நீர் கூறும்.

    48:16
  8. لَيْسَ عَلَى الْأَعْمَىٰ حَرَجٌ وَلَا عَلَى الْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى الْمَرِيضِ حَرَجٌ ۗ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۖ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا

    (ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.

    48:17
  9. لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

    முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.

    48:18
  10. وَمَغَانِمَ كَثِيرَةً يَأْخُذُونَهَا ۗ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا

    இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

    48:19
  11. وَعَدَكُمُ اللَّهُ مَغَانِمَ كَثِيرَةً تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَٰذِهِ وَكَفَّ أَيْدِيَ النَّاسِ عَنْكُمْ وَلِتَكُونَ آيَةً لِلْمُؤْمِنِينَ وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُسْتَقِيمًا

    ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).

    48:20
  12. وَأُخْرَىٰ لَمْ تَقْدِرُوا عَلَيْهَا قَدْ أَحَاطَ اللَّهُ بِهَا ۚ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرًا

    மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது; அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை; ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.

    48:21
  13. وَلَوْ قَاتَلَكُمُ الَّذِينَ كَفَرُوا لَوَلَّوُا الْأَدْبَارَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا

    நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின்வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.

    48:22
  14. سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا

    இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.

    48:23
  15. وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ ۚ وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا

    இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.

    48:24
  16. هُمُ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوفًا أَنْ يَبْلُغَ مَحِلَّهُ ۚ وَلَوْلَا رِجَالٌ مُؤْمِنُونَ وَنِسَاءٌ مُؤْمِنَاتٌ لَمْ تَعْلَمُوهُمْ أَنْ تَطَئُوهُمْ فَتُصِيبَكُمْ مِنْهُمْ مَعَرَّةٌ بِغَيْرِ عِلْمٍ ۖ لِيُدْخِلَ اللَّهُ فِي رَحْمَتِهِ مَنْ يَشَاءُ ۚ لَوْ تَزَيَّلُوا لَعَذَّبْنَا الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابًا أَلِيمًا

    “மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.

    48:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்