முஸ்ஹப், பக்கம் 519
-
وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
50:16 -
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
50:17 -
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
50:18 -
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது; (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
50:19 -
وَنُفِخَ فِي الصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ الْوَعِيدِ
மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சுறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
50:20 -
وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ
அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
50:21 -
لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِنْ هَٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ
“நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.” (என்று கூறப்படும்).
50:22 -
وَقَالَ قَرِينُهُ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ
அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) “இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்.
50:23 -
أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
“மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
50:24 -
مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ مُرِيبٍ
“(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
50:25 -
الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ
“அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றுங் கூறப்படும்).
50:26 -
قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَٰكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ
(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்| “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-”
50:27 -
قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُمْ بِالْوَعِيدِ
“என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
50:28 -
مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ
(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).
50:29 -
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ
நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
50:30 -
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
50:31 -
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”
50:32 -
مَنْ خَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ
எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
50:33 -
ادْخُلُوهَا بِسَلَامٍ ۖ ذَٰلِكَ يَوْمُ الْخُلُودِ
“ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்” (என்று கூறப்படும்).
50:34 -
لَهُمْ مَا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது; இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
50:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்