சூரா 35 ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)

  1. وَلَا الظِّلُّ وَلَا الْحَرُورُ

    (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).

    35:21
  2. وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ ۚ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَنْ يَشَاءُ ۖ وَمَا أَنْتَ بِمُسْمِعٍ مَنْ فِي الْقُبُورِ

    அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.

    35:22
  3. إِنْ أَنْتَ إِلَّا نَذِيرٌ

    நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.

    35:23
  4. إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا ۚ وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ

    நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.

    35:24
  5. وَإِنْ يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ

    இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.

    35:25
  6. ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ

    பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.

    35:26
  7. أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا ۚ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ

    நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.

    35:27
  8. وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ

    இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

    35:28
  9. إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ

    நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.

    35:29
  10. لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ ۚ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ

    அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.

    35:30
  11. وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ مِنَ الْكِتَابِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ ۗ إِنَّ اللَّهَ بِعِبَادِهِ لَخَبِيرٌ بَصِيرٌ

    (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.

    35:31
  12. ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيرُ

    பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.

    35:32
  13. جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا ۖ وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

    அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.

    35:33
  14. وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ

    “எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

    35:34
  15. الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ

    “அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).

    35:35
  16. وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَىٰ عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا ۚ كَذَٰلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ

    எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.

    35:36
  17. وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ

    இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்| “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).

    35:37
  18. إِنَّ اللَّهَ عَالِمُ غَيْبِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ

    நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.

    35:38
  19. هُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ ۚ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا ۖ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا

    அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.

    35:39
  20. قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَىٰ بَيِّنَتٍ مِنْهُ ۚ بَلْ إِنْ يَعِدُ الظَّالِمُونَ بَعْضُهُمْ بَعْضًا إِلَّا غُرُورًا

    “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).

    35:40

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்