சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

  1. وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ۚ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

    எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

    3:161
  2. أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطٍ مِنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ ۚ وَبِئْسَ الْمَصِيرُ

    அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.

    3:162
  3. هُمْ دَرَجَاتٌ عِنْدَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ

    அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.

    3:163
  4. لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

    நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.

    3:164
  5. أَوَلَمَّا أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَدْ أَصَبْتُمْ مِثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَٰذَا ۖ قُلْ هُوَ مِنْ عِنْدِ أَنْفُسِكُمْ ۗ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்| இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”

    3:165
  6. وَمَا أَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ فَبِإِذْنِ اللَّهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِينَ

    மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.

    3:166
  7. وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا ۖ قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ ۚ يَقُولُونَ بِأَفْوَاهِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ ۗ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ

    இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது| “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்| “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

    3:167
  8. الَّذِينَ قَالُوا لِإِخْوَانِهِمْ وَقَعَدُوا لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا ۗ قُلْ فَادْرَءُوا عَنْ أَنْفُسِكُمُ الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

    (போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி| “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).

    3:168
  9. وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

    அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

    3:169
  10. فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

    தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.

    3:170
  11. يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ

    அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.

    3:171
  12. الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا مِنْهُمْ وَاتَّقَوْا أَجْرٌ عَظِيمٌ

    அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.

    3:172
  13. الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

    மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது| “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.

    3:173
  14. فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ ۗ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ

    இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.

    3:174
  15. إِنَّمَا ذَٰلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

    ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.

    3:175
  16. وَلَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ ۚ إِنَّهُمْ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا ۗ يُرِيدُ اللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِي الْآخِرَةِ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

    “குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.

    3:176
  17. إِنَّ الَّذِينَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْإِيمَانِ لَنْ يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

    யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.

    3:177
  18. وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنْفُسِهِمْ ۚ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُهِينٌ

    இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

    3:178
  19. مَا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَىٰ مَا أَنْتُمْ عَلَيْهِ حَتَّىٰ يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ ۗ وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَٰكِنَّ اللَّهَ يَجْتَبِي مِنْ رُسُلِهِ مَنْ يَشَاءُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ۚ وَإِنْ تُؤْمِنُوا وَتَتَّقُوا فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ

    (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.

    3:179
  20. وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ ۖ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

    அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.

    3:180

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்