சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)

  1. وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ ۖ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ۚ وَفِي ذَٰلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ

    இன்னும் நினைவு கூறுங்கள்| ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.

    7:141
  2. وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ

    மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.

    7:142
  3. وَلَمَّا جَاءَ مُوسَىٰ لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ ۚ قَالَ لَنْ تَرَانِي وَلَٰكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي ۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَىٰ صَعِقًا ۚ فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ

    நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா| “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

    7:143
  4. قَالَ يَا مُوسَىٰ إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَاتِي وَبِكَلَامِي فَخُذْ مَا آتَيْتُكَ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ

    அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.

    7:144
  5. وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا ۚ سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ

    மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி| “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).

    7:145
  6. سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِنْ يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ

    எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.

    7:146
  7. وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ حَبِطَتْ أَعْمَالُهُمْ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ

    எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?

    7:147
  8. وَاتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنْ بَعْدِهِ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا أَنَّهُ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ اتَّخَذُوهُ وَكَانُوا ظَالِمِينَ

    மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.

    7:148
  9. وَلَمَّا سُقِطَ فِي أَيْدِيهِمْ وَرَأَوْا أَنَّهُمْ قَدْ ضَلُّوا قَالُوا لَئِنْ لَمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

    அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்| “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.

    7:149
  10. وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَمَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي ۖ أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ ۖ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ ۚ قَالَ ابْنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءَ وَلَا تَجْعَلْنِي مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

    (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) “நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?” என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) “என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) “பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்” இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்” என்று கூறினார்.

    7:150
  11. قَالَ رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ ۖ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

    “என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

    7:151
  12. إِنَّ الَّذِينَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِنْ رَبِّهِمْ وَذِلَّةٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُفْتَرِينَ

    நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.

    7:152
  13. وَالَّذِينَ عَمِلُوا السَّيِّئَاتِ ثُمَّ تَابُوا مِنْ بَعْدِهَا وَآمَنُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ

    ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து; (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.

    7:153
  14. وَلَمَّا سَكَتَ عَنْ مُوسَى الْغَضَبُ أَخَذَ الْأَلْوَاحَ ۖ وَفِي نُسْخَتِهَا هُدًى وَرَحْمَةٌ لِلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُونَ

    மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.

    7:154
  15. وَاخْتَارَ مُوسَىٰ قَوْمَهُ سَبْعِينَ رَجُلًا لِمِيقَاتِنَا ۖ فَلَمَّا أَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُمْ مِنْ قَبْلُ وَإِيَّايَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَاءُ مِنَّا ۖ إِنْ هِيَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَنْ تَشَاءُ وَتَهْدِي مَنْ تَشَاءُ ۖ أَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۖ وَأَنْتَ خَيْرُ الْغَافِرِينَ

    இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.

    7:155
  16. وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ ۚ قَالَ عَذَابِي أُصِيبُ بِهِ مَنْ أَشَاءُ ۖ وَرَحْمَتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ

    “இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.

    7:156
  17. الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الْأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِنْدَهُمْ فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ يَأْمُرُهُمْ بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ ۚ فَالَّذِينَ آمَنُوا بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ ۙ أُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

    எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.

    7:157
  18. قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

    (நபியே!) நீர் கூறுவீராக| “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”

    7:158
  19. وَمِنْ قَوْمِ مُوسَىٰ أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ

    உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.

    7:159
  20. وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا ۚ وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ إِذِ اسْتَسْقَاهُ قَوْمُهُ أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ ۖ فَانْبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ ۚ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

    மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு| “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து | “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

    7:160

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்